கட்டுரை 9 / 13
சேவல் கூவுகிறது!
The Rooster Crows!
அச்சுப் பக்கம் 51–54
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
திராவிட முன்னேற்றக் கழகம் மதுரையில் கூடிய பொதுக் குழுவில் தீர்மானித்தபடி தி. மு. க. உறுதி மொழி ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவர்கள் சுமார் நூற்றைம்பதுபேர் அந்தந்த மாவட்டங்களின் குழுக்கள் கூடி அவர்களிலே ஏறக்குறைய எழுபது பேரைத் தேர்தலில் ஆதரிப்பது என்று முடிவு கூறப்பட்டது.
அந்த எழுபது பேரிலே தென்னாற்காடு மாவட்டத்திலே இருபத்தி மூன்று அபேட்சகர்கள் நம் ஆதரவு பெற்றிருக்கிறார்கள்.
தென்னாற்காடு மாவட்டத்திலே இருபத்திமூன்று ஸ்தானங்கள். அந்த இருபத்திமூன்று இடங்களிலும் நம் கழகத்தின் ஆதரவு பெற்றவர்கள் போட்டியிடுகிறார்கள்.
திராவிட நாட்டுக் குரலை எழுப்புகிற தீரர்கள்! நாட்டுப் பிரிவினையை எதிர்க்கும் நல்ல பாம்புகளைச் சந்திக்கும் கீரிகள்!
பிரிவினை கூடாது எனப் பெரு முழக்கம் செய்திடும் இருட்டுக் குகையில் ஒளிந்திருக்கும் சுயநலப் பேயர்களை நாட்டுக்கு அம்பலப்படுத்தும் அறிவு விளக்குகள்!
தென்னாற்காடு மாவட்டத்திலே உழைப்பாளிகள் கட்சி காங்கிரசின் சமாதிக்கு அஸ்திவாரம் அமைக்கிற கட்சி. பொதுநலத் தொண்டரும், உழைப்பாளிகளின் உற்ற தோழரும், உழைப்பாளி கட்சியின் தளபதியுமான தோழர் S. S. இராமசாமி அவர்களும் அவருடன் தோளோடு தோள் இணைந்து தொண்டு புரியும் தோழர்களும் கொடுமைகளைத் தொலைத்திடும் திருப்பணியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். தென்னாற்காடு மாவட்டத்திலே இந்தத் தீரர்கள் உலவாத இடமில்லை! தேர்தல் நேரத்திலே மட்டுமல்ல, தென்னாற்காட்டைத் தங்கள் வீடென்று எண்ணி தென்னாற்காட்டு மக்களைத் தங்கள் குடும்பத்தினர் என்ற எண்ணத்தை ஏந்தி வாழ்ந்திடும் வைரமணிகள் தான் உழைப்பாளிக் கட்சிக்கான நண்பர்கள்.
இத்தகைய இலட்சிய வீரர்கள் நடைபோடும் தென்னாற்காட்டிலே, மூவேந்தரின் மரபினர் காவல் புரியும் அந்த முத்தமிழ்ச் சோலையிலே மாடுகள் நுழையத் துணிகின்றன. மிக மிகக் கொடுமையான செய்தி, வடநாட்டுக் கோயாங்கா வள்ளுவர் பரம்பரையை எதிர்க்க வந்திருப்பதுதான்!
திராவிடத்தின் அழியாத செல்வம் திருக்குறள்; அந்தக் குறளை ஏந்தி நிற்பவர் திராவிடப் பிரிவினையை ஆதரிக்கும் திருக்குறள் முனிசாமி!
கோயாங்காவின் செல்வம், திராவிடத்திலே சுரண்டப்பட்ட செல்வம்!
இந்த—இரண்டு செல்வங்களும் மோதுகின்றன!
விபீஷணர்கள் சுக்ரீவர்கள் கோயாங்கா பக்கத்திலே! காங்கிரஸ் படையிலே!
வீரர்கள், சுயமரியாதை உணர்வு பெற்றவர்கள் அத்தனை பேரும் நம் பக்கத்திலே!
காங்கிரஸ் அவசர அவசரமாகச் சவக் குழிக்குச் செல்லவேண்டும். அந்த சத் காரியத்திலே ஈடுபடச் சங்க நாதம் செய்து விட்டார்கள் தென்னாற்காட்டார்.
தென்னாற்காடே! திராவிடத்தின் தூண்டா மணி விளக்கே! தேன் கீதமே! தித்திக்கும் திராவிடக் கனியே! உன் திறமையைக் காட்ட நேரம் வந்து விட்டது தயாராகிக் கொள்! சிங்க நெஞ்சு கொண்ட தென்னாற்காட்டுச் செயல் வீரர்காள்!
உங்கள் சிரிப்பிலே அழியட்டும் சீர்கெட்ட காங்கிரஸ்! பணம் விளையாடும்! காங்கிரசின் பட்டாளம் வேலை செய்யும்! அஞ்சேல், அயரேல்
திராவிட நாட்டுக் குரல் சட்டசபையிலே, பார்லிமெண்டிலே ஒலிக்கப் போகிறது! அதற்கு வலிமை தேடித்தா! தோளுயர்த்திவா தொண்டாற்ற! தி. மு. க.
ஆதரவு பெற்றவர்கள் எழுபது பேருக்கு மேற்பட்டவர்கள்! இருபத்தி மூன்று பேர் தென்னாற்காட்டார்!
உரத்த குரலில் உணர்ச்சி ஒலியில் திராவிடத் தீந்தமிழ்ப் பரணி பாடப்பட காங்கிரசைப் புறமுதுகிடச் செய்!
தென்னாற்காடே நீ தரும் பாடம் காங்கிரசுக்குப் புத்தி சொல்லட்டும்!
நீ பறக்க விடுகிற வெற்றிக் கொடி, நம்மைப் பதைக்க உயிர் வாங்கியவர்களை, பட்டினிபோட்டவர்களை பஞ்சம் வளர்த்த ஆட்சியை பாடையில் ஏற்றட்டும்!
“திராவிட நாடு திராவிடருக்கே!” தென்னாற்காடே! உரக்கச் சொல்! உத்வேகத்தோடு சொல்!
உழைப்பாளிக் கட்சியே உயரப் பறக்க விடு உன் கொடியை!
மாட்டுப் பெட்டி மாங்கல்யம் அறுந்த பெட்டி! மனித வாழ்வை மண்ணாக்கிய பெட்டி! கொடுமை வளர்த்த பெட்டி! கோணல் ஆட்சி நடத்திய பெட்டி!
“சேவல் பெட்டி தீரர்களின் பெட்டி வேதனை இருள் நீங்குவதை அறிவிக்க-விடுதலை விடிவெள்ளி முளைக்கிறதை உணர்த்த செங்கதிர் கிளம்புவதைச் சொல்ல சேவல் கூவுகிறது! சேவலை வாழ்த்துங்கள்! வழங்குங்கள், ஓட்டுக்களை! வெல்க தென்னாற்காடு! வீழ்க காங்கிரஸ்!
கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்