பொருளடக்கம்

2. மாளிகை அமைத்திட வாரீர்!

கட்டுரை 2 / 13

மாளிகை அமைத்திட வாரீர்!

Come, Let Us Build the Mansion!

அச்சுப் பக்கம் 9–14

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சிய கீதமான, “திராவிடநாடு திராவிடருக்கே!” என்ற முழக்கம் சென்னை மாநில மாநாட்டிலே இரண்டு லட்சம் மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்திருந்தது.

மாநாட்டின் நான்காம் நாள் நிறைவேறிய தீர்மானங்கள் அத்தனைக்கும் சிகரம் வைத்தாற்போல அமைந்தது அந்த இலட்சியத் தீர்மானம்.

மாநாட்டிலே, கழகத்தின் முன்னணி வீரர்கள், தீர்மானங்கள் என்னும் திருவிளக்கேந்தி, தெளிவற்று இருண்டிருந்த பிரச்சினைகள் பலவற்றை, நாட்டினர் முன்னே எடுத்து வைத்து விளக்கவுரையாற்றியிருக்கிறார்கள். அந்தத் தீர்மானங்களிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல், பொருளாதார, சமுதாயக் கண்ணோட்டங்களைச் சிறந்த முறையில் உணர முடிகிறது.

நாடாள வந்தவரின் நாச விளையாட்டுகளைக் கண்டிக்கும் முறையில் தீர்மானங்கள்.

ஏழை பங்காளர், கோல் பிடித்த பிறகு, நூல் பற்றாக்குறையால் பிணமான ஏழைகளின் நிலையை விளக்கி, கைத்தறிப் பிரச்சினையிலே கவனம் செலுத்த வேண்டிய முறையை சுட்டிக் காட்டிடும் தீர்மானங்கள்.

தொழில்களைப் பணத் தொந்திகளே தொடர்ந்து நடத்தாமல், தேசீய மயமாக்கும் திட்டங்களை, வற்புறுத்தி, வகைகள் தெரிவித்து, வழி காட்டிடும் தீர்மானங்கள்.

விவசாய முன்னேற்றம், விவசாயிகளின் நல்வாழ்வு பற்றிய அக்கரையைத் தெரிவித்து, அதற்காவன செய்யும்படி அரசியலாரைத் தூண்டிவிடும் தீர்மானங்கள்.

சித்தூரும், நாஞ்சிலும் சேர்ந்திருக்க வேண்டியது செந்தமிழ் நாட்டோடுதான் என்பதை எடுத்துரைத்து, ஆந்திரர் தமிழர் பேதத்தை வீணாகச் சிருஷ்டிக்கும் வீணர்களுக்கு விவேக போதனை செய்து, தமிழர்—ஆந்திரர் கசப்பு வளர்ந்தால் வடநாட்டார் வேட்டை அதிகமாகும் என்பதை உணர்த்திக் காட்டி, நேர்மையான முறையில் ஏற்படும் மொழிவழி அமைப்புக்களை உடனடியாக ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கு ஆதரவளித்து, அதற்கெனத் தீர்மானங்கள்.

இரயில்வே பிரச்சினையை ஆராய்ந்து, இலங்கைப் பிரச்சினையை விவரித்து, இதற்கான வழிதுறை தேடிடும் தீர்மானங்கள்.

நிறவெறித் திட்டத்தைக் கண்டித்து, அதற்கு ஆக்கமளிக்கும் காமன்வெல்த்திலிருந்து இந்தியாவை வெளியேறச் சொல்லி வலியுறுத்தியும், மலேயாவில் நிரபராதிகளான திராவிடருக்கு ஏற்படும் கொடுமைகளைக் கண்டித்

தும், தென் ஆப்பிரிக்கா பிரச்னையில் நம் கொள்கையை எடுத்துக் காட்டியும், வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியா, நடு நிலைமை என்ற போர்வையில்-நேர்மை தவறிடும் ஆதிக்க வரிசையை ஆதரித்து நின்றிடும் போக்கைக் கண்டித்தும் தீர்மானங்கள்.

இத்தனை தீர்மானங்களும் நிறைவேற்றப்பட, கேட்டுக் கொள்ளப்பட்டு, வலியுறுத்தப்பட்டு என்கிற நிலைமைகளே ஏற்படாமல் இருக்கத்தான், நாமே நம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத்தான், டில்லியின் பிடியில் அகப்பட்டு, டில்லி அனுஷ்டிக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்குத் தலையாட்டி, டில்லி செய்யும் தீர்மானங்களுக்குத் தலை குனிந்து, பொட்டுப் பூச்சிகளாய் வாழாமல் இருக்கத்தான் திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியதோடு அதற்கான எல்லாவித நடவடிக்கைகளையும் ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாநாடு சங்கநாதம் செய்தது!

'திராவிட நாடு'. நம் உயிர்ப் பிரச்னை; உயிர்போகிற நேரத்திலே கூட ஒரு முறை உரக்கக் கூவிட வேண்டிய தக்க சொல்! 'தாரக மந்திரம்', திராவிட நாடு! அந்த இன்ப இலட்சியத்திற்காகத்தான் நம்மவரில் பலரது வாழ்வு நசுங்கிப் போயிற்று!

உடையார் பாளையம் வேலாயுதம் பிணமாகத் தொங்கியதும், தாலமுத்தும் நடராசனும் கல்லறைக்

களாக மாறியதும் அந்தச் சுந்தரச் சொல்லுக்காகத்தான்! வாழ்வைக் கருக்கிக் கொண்டோர், வாழ்வை அணைத்துக் கொண்டோர் எல்லோருமே திராவிடம் என்ற தேன் சுவையில் துன்பம் மறந்தனர்!

அழகிரி மாண்டான்! அப்போதும் திராவிடம் என்ற இன்பக் குழந்தையை வளர்க்க நாம் வாழ்ந்தோம்!

செல்வம் மறைந்தான்! அப்போதும் திராவிடப் பூங்காவின் காவலாளிகள் நாம் என்று எண்ணிக் கண்ணீர் துடைத்துக் கொண்டோம்!

நாகைமணி, மாயவரம் நடராசன், நாகம்மையார், தியாகராசர், பனகல், நாயர் எத்தனையோ தங்கங்கள் நம்மைத் தவிக்க விட்டு மறைந்தன. அப்போதும் 'திராவிடம்' என்ற வைரம் நம்மைக் குளிர வைத்தது!

பெரியார் கொள்கை தவறினார்! அப்போதும் 'திராவிடம்' என்ற நிலவை நினைத்து—நெஞ்சில் இன்பம் சேர்த்தோம்! அத்தகைய திராவிடம், அனல் பொழியினும் அஞ்சிடாது பெறுவோம் என்று ஆண்மை கொழித்திடும் ஆற்றல் மறவர்களின் போர்க் கீதமாக இருக்கும் திராவிடம். மலை வந்தெதிர்த்த போதும் நிலை குலையோம் “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்று வீரம் பாடி சோகம் துரத்தி வேகம் தளராது விடுதலைக் கொடி பிடிக்கத் துடிக்கும் மாவீரர்களின் மனதிற் குடியேறிய திராவிடம், தேர்தல் நடனம் புரிய

அழைக்கும் திருக்கூட்டத்தினரின் தித்திப்புச் சொற்களால் தேய்ந்து விடக் கூடியதல்ல!

மாளிகைக்காரர் உருட்டி விடும் பணக் குண்டுகளால் மாய்ந்து விடக் கூடியதல்ல! திராவிடத்தை ஒப்புக்கொள்கிறாயா என்று கேட்பது, ஒப்பந்தப் பிச்சை என்று கோணல் மொழி பேசி, கொள்கையை விலை கூறி "பார் பார் பட்டணம் பார்!" என்று அரசியல் விளம்பரச் சூதாட்டமாடுபவர்களின் தந்திர மொழிகளால் தவிடு பொடியாகிவிடக் கூடியதல்ல! திராவிடம்! தணலில் போட்டால் மாற்று உயரும் தங்கம்! உடைக்க உடைக்க ஒளியேறும் வைரம்! தங்கத்தை இழக்க மாட்டான் தன் மதிப்புள்ள திராவிடன்! அதுவும்-பித்தளையோடு பண்ட மாற்று செய்து!

வைரத்தை கொடுக்க மாட்டான் வீரத்திராவிடன்! அதுவும், கூழாங்கல்லை பதிலுக்குப் பெற்றுக் கொண்டு!

அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உருவான மாற்றமில்லாத மாணிக்கக் கொள்கை! அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்தை மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும், திராவிட சமுதாயம். பொதுச் செயலாளர் கூறியது போல ஐம்பத்தி நாலாம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்துவோம். அறுபதிலே திராவிடத்தில் வாழ ஆவன செய்திடுவோம். அதற்கான அடிப்படை வேலைகளை இப்போதே தொடங்குவோம். தேர்தல் தெம்மாங்கு மட்டுமல்ல, இப்

போது முக்கியம்! அபேட்சர்கள் ஊர்வலம் மட்டுமல்ல இப்போது அவசியம்! தேர்தல், மழையிலே பிடித்துக் கொள்ளும் குடை! குடையைப் பிடித்துக் கொண்டு, போக வேண்டிய இடத்தை மறந்து விடக்கூடாது!

மழையிலே நின்றால் கொள்கைத் தவறுதல் என்னும் குளிர் காய்ச்சல் வரும்! பதவித் தலைவலி உண்டாகும்! பிறகு சுயநல ஜன்னி பிறந்து விடும்! குடையும் பிடித்துக் கொள்வோம்! மழையையும் தடுப்போம்! செல்ல வேண்டிய இடத்துக்கும் செல்வோம்!

தேர்தலில் நம் ஆதரவைத் தருவோம்! காங்கிரசை ஒழிப்போம்! அதோடு திராவிட நாட்டுப் பிரச்சினையையும் மறக்காமல் நடப்போம்! இந்த எண்ணத்தின் எதிரொலிதான் மாநில மாநாட்டிலே இரண்டு லட்ச மக்களின் இதயத்தைத் தொட்டது! எழுச்சி முரசும் ஆர்த்தது. எலும்புகளைக் கற்களாக ஈந்து, நரம்புகளைக் கயிறுகளாகத் தந்து, மண்டையோடுகள் கூரையாக, மாமிசமும் இரத்தமும் சேறாகக் கலக்கப்பட்டு—மாளிகை அமைப்போம்!

அதுதான் மாவீரர் கட்டிடும் மாளிகை! மாற்றான் அஞ்சும் மாளிகை! மார்வாரி ஆதிக்கமற்ற மாளிகை! வெளிநாட்டு வெறியற்ற மாளிகை! சமரச மாளிகை! சமதர்ம மாளிகை! பொது உடமை மாளிகை! புதிய மாளிகை! திராவிட நாடெனும் மாளிகை!

அந்த மாளிகை அமைத்திட வாரீர்! மாவீரரே ஒன்று சேரீர்!

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்