பொருளடக்கம்

3. மந்திரிகள் குலை நடுக்கம்

கட்டுரை 3 / 13

மந்திரிகள் குலை நடுக்கம்

Ministers Tremble in Fear

அச்சுப் பக்கம் 15–18

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியிலே சென்னை மாகாண முதலமைச்சர் அசெம்பிளிக்கும், விருதுநகரின் விசித்திர மனிதர் காமராசர் பார்லிமெண்ட்டுக்கும் காங்கிரஸ் அபேட்சகர்களாக நிற்கும் தொகுதியிலே காங்கிரஸ்காரர் ஒரு மாநாடு கூட்டினார்கள். இதற்கு மந்திரிமார்கள் வந்து பேசுவதென்று ஏற்பாடு செய்யப்பட்டு, அமைச்சர் பரமேசுவரன் உட்பட, குமாரசாமி ராஜா, பெருமாள்சாமி ரெட்டியார் போன்ற அமைச்சர்கள் அங்குச் சென்றிருந்தனர்.

ஆனால் மாநாடு கூட்டியவர்கள் கலைவாணர் நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 'நான் கண்ட ரஷ்யா' என்னும் வில்லுப் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து அறிவைப் பெருக்கிக்கொள்ள விழைந்து அவரையும் மாநாட்டுக்கு அழைத்திருந்தனர். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தம் குழுவினருடன் மாநாட்டிற்கு வந்து தம் வில்லுப் பாட்டைத் துவக்கி விட்டார் என்பதை அறிந்தவுடன், அமைச்சர்கள் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் நழுவி விட்டனர் என்று ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. இச் செய்தி உண்மையாயின், இதை விட மானங்கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க

முடியாது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தாம் ரஷியா சென்று நேரிற்கண்டவைகளை வில்லுப் பாட்டாக அமைத்து அழகாகப் பாடி வருகின்றார். அவ்வில்லுப் பாட்டின் மூலம், ரஷியர்கள் தங்கள் நாட்டை எவ்வண்ணம் நடத்துகின்றனர்? ரஷ்யா இன்று எத்தகைய உன்னத நிலையை அடைந்திருக்கிறது என்பதை நம் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது.

இதைக் கண்டு, காங்கிரஸ் மந்திரிகள் காற்றினும் கடுகி ஓட்டம்பிடிப்பதென்றால், இதனை என்னென்பது? ஏன் இந்த மந்திரிகள் ஓட்டம் பிடிக்க வேண்டும்? ரஷ்யாவிலே ஒழுங்காக மழை பொழிவதில்லை. எனவே, அவர்கள் மழையை மதிக்காமல் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை விளைவிக்கும் வித்தையைக் கண்டு பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்! அதனால் அவர்கள் பஞ்சங் கண்டு அஞ்சுவதில்லை. அந்த நாட்டில் எவ்வளவு கொடுமையான போர் நெருக்கடி காலத்திலும் உணவு நெருக்கடி தோன்றவில்லை. மேலும் அங்கே மக்கள் வாழ்க்கை வளம் நிறைந்ததாக ஆக்கப் பட்டிருக்கிறது. வாழ்க்கை துன்பம் என்பது அங்கு மருந்துக்கும் கிடையாது. இதனால் அங்குத் திருட்டு, சூது, வஞ்சகம், கொலை போன்ற குற்றங்கள் நடை பெறுவது அரிது. மக்கள் எத்தேவையுமற்ற வகையில் எல்லா வசதிகளும் உடையவர்களாக வாழ்வதால் அங்கு அரசாங்கத்துக்கு எதிர்ப்புமில்லை. மக்களிடை எரியுணர்ச்சியுமில்லை. அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சி

யும் பெருகிய மக்கள் வாழ்வு அங்கு நடைபெறுகிறது என்பதைக் கலைவாணர் தம் வில்லுப்பாட்டின் மூலம் விளக்குகின்றார்.

இந்த உண்மைகளை மக்கள் உணர்ந்துவிட்டால் காங்கிரஸ் ஆட்சியின் நேர்மைக் குறைவு, திறமையின்மை, நாணயக்குறைவு, சுயநலப் போக்கு முதலிய சீர்கேடுகளின் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்வார்களென்றும், நாட்டில் பஞ்சம் நிலவியிருப்பதும் இலஞ்ச ஊழல் பெருகிக் கிடப்பதும் கள்ளச் சந்தை சர்வ வியாபியாகி விட்டிருப்பதும் காங்கிரசுக்கார்களின் சுயநலத்தால் விளையும் கேடுதான் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் அதன் மீது, தாங்கள் பேசினால் மக்கள் எதிர்த்துக் கேள்விகள் கேட்க நேரிட்டால் தங்களிடம் தக்க பதிலின்மையால் திண்டாடித் திணற நேரிடுமென்றும் நன்கு அறிந்துதான் இந்த மந்திரிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்திருக்க வேண்டும்.

மக்கள் மன்றத்தின் முன் நின்று, மக்களின் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில் கூறி, அவர்களைச் சமாதானப் படுத்துவதென்பது காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பொறுத்த மட்டில் இயலாக் காரியமாகையால், நேர்மையைக் கண்டு அவர்கள் அஞ்சியோடாமல் பின் என்ன செய்வர்? நேர்மையாக, நாணயமாகக் கொள்கையின் மீது தேர்தலில் நின்று வெற்றி பெறுவ

தென்பது காங்கிரஸ் அகராதியில் கிடையாது. ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து, வடநாட்டிலிருந்து எவரையாவது இங்கு இறக்குமதி செய்து கண் காட்சியாகச் சுற்றி இழுத்துவந்து, மற்றும் பலபலத் தந்திரங்களைச் செய்து, அதிகாரத்தைப் பயன் படுத்தி, போலீசைத் துணையாகக் கொண்டு இவ்வாறெல்லாம் வெற்றிபெற்று விட முடியுமாகையால், மக்கள் மன்றத்தின் முன் நிற்க வேண்டிய தேவையில்லையென்றும் எங்காவது கள்ளச் சந்தையினர், பர்மிட்தாரர்கள், லைசென்ஸ்காரர்கள், காண்ட்ராக்டர்கள் ஆகியோரின் கூட்டங்களைக் கூட்டி அவற்றை மக்கள் மன்றமெனக்காட்டி ஜனநாயகம் பேசுபவர்களை ஏய்த்து விடலாமென்றும் நெஞ்சுறுதி பூண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உண்மையைக் கண்டு ஓட்டம் பிடிக்காமல் வேறென்ன செய்வார்கள்!

அந்தோ! இப்படிப் பட்ட காங்கிரசுக்காரர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கதி என்னாகும்! எனவே மக்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காங்கிரசுக்காரருக்கு ஓட்டளிக்காமல் எதிர்த்து நிற்பவர்களுள்ளும் ஒரே ஒருவரைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறச் செய்வார்களாக.........

கலைஞர் மு. கருணாநிதி · பெருமூச்சு. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்